Friday, May 2, 2014

சூனியம.
2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள்.
Volume :3 Book :55
3175. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.
Volume :3 Book :58
3268. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள்.
(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.
Volume :3 Book :59
5445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச்சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :70
5469. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்
மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) 'குபா'வில்ழூழூ தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாம்விட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். எனவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், 'யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது' எனக் கூறப்பட்டுவந்தது.
Volume :6 Book :71
5763. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பனூஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.
பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்?' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது?' என்று கேட்க, மற்றவர், '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள்.
நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. 89
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) 'சீப்பிலும் சணல் நாரிலும்' என்று காணப்படுகிறது. தலையை வாரும்போது கழியும் முடிக்கே 'முஷாதத்' (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும்போது வெளிவரும் நாருக்கே 'முஷாகத்' (சணல் நார்) எனப்படும்.
Volume :6 Book :76
5764. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 90
Volume :6 Book :76
5765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.
நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள். 92
Volume :6 Book :76
5766. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்தபோது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், 'ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக்கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குக் தெளிவளித்துவிட்டான்' என்று கூறினார்கள்.
நான், 'என்ன அது, இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்க, மற்றவர், 'இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், 'இவருக்கு யார் சூனியம் வைத்தார்?' என்று கேட்க, மற்றவர், 'பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் எனும் யூதன்' என்று பதிலளித்தார். முதலாமவர், 'எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?' என்று கேட்க, அடுத்தவர், 'சீப்பிலும் சிக்குமுடியிலும் ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று கூறினார். முதலாமவர், 'அது எங்கே வைக்கப்பட்டுள்ளது?' என்று கேட்க, அடுத்தவர், 'தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில்' என்று பதிலளித்தார்.
எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன. (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.)
பிறகு ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, 'அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்ற (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்(து பார்த்)தீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை; எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்திவிட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்துவிடுவார்களோ என அஞ்சினேன்' என்று கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.
Volume :6 Book :76
5768. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தினந்தோறும் காலையில் சில 'அஜ்வா' ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது.
என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் அலீ இப்னு மதீனீ(ரஹ்) அல்லாத மற்றவர்கள் 'ஏழு பேரீச்சம் பழங்களை' என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்தார்கள். 95 
5769. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ, எந்தச் சூனியமோ இடரளிக்காது.
என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :76
5779. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது.
என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். 107
Volume :6 Book :76
6063. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்துவிட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள். அவர்கள் ஒரு நாள் என்னிடம், 'ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (நான் உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), 'இந்த மனிதரின் நிலை என்ன?' என்று கேட்க, மற்றவர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்றுகேட்க, மற்றவர், 'லபீத் இப்னு அஃஸம்' என்று பதிலளித்தார். முதலாமவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு 'தர்வான்' (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.
எனவே, நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), 'இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது' என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். நானோ (அதைப் பிரித்துக் காட்டுவதால்) மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன்' என்று கூறினார்கள்.
(நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்த) லபீத் இப்னு அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான்.81
Volume :6 Book :78
6391. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.
(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்?' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது?' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார்.
'தர்வான்' என்பது பனூஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.
பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
Volume :6 Book :80
6857. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.70

No comments:

Post a Comment