Wednesday, May 14, 2014

              மௌலிதுகள் ஓதலாமா?
கலீபதுல் காதிரி மௌலவி பாஸில் ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்
மௌலிது ஓதுவதில் பின்வரும் காரியங்கள் இடம்பெறுகின்றன.
1.  மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து திருக்குஅர்ஆன் ஓதுவர்.
2.    நபிமார்களில் ஒருவரின் அல்லது வலிமார்களில் ஒருவரின். பிறப்பின் போது   நடந்த அற்புத நிகழ்வுகளைக் கூறுதல் அல்லது வாசித்தல்.
3.    அவர்களின் நற்பண்புகள் உள்ளிட்ட அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பிரஸ்தாபித்தல்.
4. அவர்களிலிருந்து வெளிப்பட்ட அற்புத் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக் கூறல்.
5.   நிகழ்ச்சியின் முடிவில் ஏழைகளுக்கும், ஏனையவர்களுக்கும் அன்னதானம் வழங்கல்.
மேற்கண்டவைகளின் மொத்த நிகழ்வுக்கே மௌலிது என்று வழக்கில் கூறப்படுகின்றது.
‘மௌலிது’ ஓதுவதில் பின்வரும் நோக்கங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
1. நபிமார்கள், வலிமார்கள் உள்ளிட்டோரின் புகழையும், அவர்களின் நற்பண்புகளையும், அருமை பெருமைகளையும் கூறுவதன் மூலம் அவர்களை கண்ணியப்படுத்துதல்.
2.    இதன் மூலம் அவர்களை விசுவாசிப்பதற்கு மக்களைத் தூண்டுவது.
3.    அவர்கள் கூறிய இஸ்லாத்தின் சட்டதிட்டங்களையும், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை செவ்வைப்படுத்திய இமாம்களின் கூற்றுக்களையும் உண்மைப் படுத்துவதற்கு மக்களைத் தூண்டுதல்.
4.    நபிமார்கள், வலிமார்கள் பேரில் அன்பை வெளிப்படுத்துதல், அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல்.
5. அவர்கள் மீது அல்லாஹுத்தஆலா சொரிந்துள்ள அருட்பாக்கியங்களை எடுத்துக் கூறுதல்.
6.    அல்லாஹுத்தஆலா அருளிய இந்த அருட்பாக்கியங்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் வணக்க வழிபாடுகள் செய்தல்.
உதாரணமாக:
இவர்கள் பிறந்த தினத்தில், அல்லது பிறந்த மாதத்தில் அல்லது அவர்கள் வபாத்தான தினத்தில் உணவளித்தல்.

மேற்கண்ட ஏழு அம்சங்களும்தான் மௌலிது வைபவங்களில் நடைபெறுகின்றன. இவைகள் யாவும் ஷரீஅத்தின் அங்கீகாரத்தைப் பெற்றவைகளாகும்.
‘ஷாரிஉ’ (ஷரிஅத் சட்டங்களை உருவாக்க அதிகாரம் பெற்றவர்) ஆகிய அல்லாஹ்வோ அல்லது அவனது திருத்தூதரோ இவற்றில் எதையும் குறிப்பிட்டு தடைசெய்யவில்லை. மௌலிது வைபவங்களில் நன்மையான பல காரியங்கள் ஒன்று சேர்ந்துள்ளதைக் காணமுமுடியும். ஆகவே பல நன்மைகள் ஒன்றுசேர்ந்திருக்கும் மௌலிது வைபவங்களை தடைசெய்வதற்கு ஷரீஅத்தில் எதுவித நியாயங்களும் கிடையவே கிடையாது.
1. புகழ்பாடல்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
‘நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குகளும், நபியின் மீது ஸலவாத் கூறுகின்றனர். (ஆதலால்) விசுவாசிகளே! நீங்களும் அவர்மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்’.
இதற்கான விளக்கத்தை இமாம் பைழாவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இப்படி வரைகின்றார்கள்.
‘அல்லாஹ்வும், மலக்குகளும் நபிகள் நாதர் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறுவதன் பொருள் யாதெனில், அன்னாரின் சிறப்பை வெளிப்படுத்துவதும், அவர்களை கண்ணியப்படுத்தும் காரியங்களில் அக்கறை காட்டுவதுமாகும்.
ஆதாரம்: தப்ஸீர், பைழாவி, பக். 562
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மேற்கண்ட திருவசனத்திற்கு இப்படி விளக்கம் பகர்கின்றார்கள்.
அல்லாஹுத்தஆலா கூறும் ஸலவாத் என்பது, நபிகள் நாதரின் நற்புகழ்களை மலக்குகள் மத்தியில் கூறுவதாகும். மலக்குகள் ஸலவாத் கூறுவதன் பொருள் அன்னார்மீது பிரார்த்தனை செய்தலாகும் என்று இமாம் அபூஆலியா ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
ஹளரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள்.
‘மலக்குகள் ஸலவாத் கூறுவதின் பொருள், பறக்கத் என்ற அபிவிருத்தி செய்யுமாறு பிரார்த்தனை செய்தலையே குறிக்கும்’.
ஆதாரம், புகாரி ஷரீப், பாகம் - 2, பக். 702 (இந்திய பதிப்பு)
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
‘உம்முடைய கீர்த்தியை நாம் உமக்காக உயர்த்தினோம்’.
இமாம் குர்துபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
‘உங்களின் புகழை விண்ணிலிருக்கும் மலக்குகள் மத்தியிலும், மண்ணிலிருக்கும் மனிதர்கள் மத்தியிலும் உயர்வாக்கினோம்’.
ஆதாரம், தப்ஸீர் குர்துபி, பாகம் 20, பக். 107
தப்ஸீர் றாஸியில் இமாம் பகுறுத்தீன் றாஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
உலகம் முழுவதிலும் உங்களைப் பின்பற்றுவோரில் நிறப்புவேன். (புனித ரௌலாவின்) வாசலுக்குப் பின்னால் நின்று கொண்டும், உங்களுக்கு ஸலாம் கூறுவார்கள். உங்களின் ரௌலாவின் மண்ணை (பறக்கத்திற்காக) தங்கள் முகங்களில் தடவிக் கொள்வார்கள். (இறுதியிலும்) உங்களின் ஷபாஅத்தை ஆதரவு வைப்பார்கள். உங்களின் அதியுயர் சிறப் புக்களை மறுமை நாள்வரை நிலைக்கச் செய்வார்கள்.
ஆதாரம், தப்ஸீர் றாஸி, பாகம் - 5, பக். 32
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
(நபியே!) நிச்சயமாக உம்மை சாட்சியாளராகவும், நற்செய்தியாளராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், நாம் அனுப்பி வைத்தோம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் விசுவாசித்து அவருக்கு உதவிபுரிந்து, அவரைக் கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.
(8-9)
மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
‘பிற்காலத்திலும் (யுக முடிவு நாள் வரையில், யாவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம் என்று கூறக் கூடிய) நற்பெயரையும், (நற்புகழையும்) தந்தருள்வாயாக’.
 (26-84)
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அறிவிக்கின்றார்கள்.
ஹளரத் அபூஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு றஸூலுள்ளாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் வரலாற்றைக் கதை சொல்வதுபோன்று சஹாபாக்களுக்குக் கூறுவார். இவ்வாறு இவர் கூறியதை ஹளரத் ஹைதம் இப்னு அபி ஸினான் றழியல்லாஹு அன்ஹு செவியேற்றுள்ளார்கள்.

ஹளரத் அப்துல்லாஹ் இப்னு றவாஹா ரழியல்லாஹு அன்ஹு (புகழ்பூத்த ஒரு புலவராவார் இவர்) வீணான வார்த்தைகள் பேசும் நபரல்ல. இப்படியான இவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களைப் பற்றி புகழ்ந்து கவிபாடியுள்ளார். அவர் பாடிய கவிதை ஒன்று இதோ!
மெய் வெள்ளை வானத்தை கிழித்து சுடர் பரப்பும் வேளையில் அல்லாஹ்வின் திருத்தூதர் எம்மத்தியில் திருவேதத்தை ஓதிக் கொண்டிருப்பார்.
எமது இதயங்கள் குருடாக இருந்த வேளையில் எமக்கு அவர் வழிகாட்டினார்.
எமது இதயங்கள் அவர் போதனையால் (வெளிச்சம் பெற்று) உறுதி பெற்றன.
அவர் கூறுவது நிச்சயம் நடக்கும்.
இணை வைப்பாளர்கள் பயந்து, பயந்து உறங்கும் போதெல்லாம், அவர் தனது படுக்கையில் புரண்டு, புரண்டு உய்யாரமாக கண் மலர்வார்.
ஆதாரம்: புகாரி ஷரீப், பாகம் - 1, பக்கம் – 155 (இந்தியா)
திரு மதீனாவில் நபியவர்களைப் புகழ்ந்து கவிபாடும் புலவர்கள் பலர் இருந்தனர். இவர்களுள் ஹளரத் ஹஸ்ஸான் இப்னு தாபிக் ரலியல்லாஹு அன்ஹு முக்கியமானவர்களாகும். றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் ஹளரத் ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹுவுக்கு மஸ்ஜிந் நபவியில் ஒரு மேடை அமைத்துக் கொடுத்தார்கள். ஹளரத் ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹு அந்த மேடையில் ஏறி நின்று நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களைப் புகழ்ந்தும், காபிர்கள், முஷரிக்குகளை இகழ்ந்தும் கவிபாடுவார்கள். அப்பொழுதெல்லாம் நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் ‘றூஹுல் குத்ஸு (ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸானுக்கு வலுவூட்டுவாயாக! என்று துஆச் செய்வார்கள்’ என்று அன்னை ஆயிஷh சித்தீக்கா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: புகாரி, மிஷ;காத் - பக்கம் 410
ஹளரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கின்றார்கள்.
றஸுலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் தோழர்களில் சிலர் ஒன்றுகூடி உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நபியவர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி அவர்களைக் கடந்து செல்லுகையில், சஹாபாக்களில் ஒருவர் ‘நிச்சயமாக நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹுத்தஆலா நண்பனாக ஏற்றுக்கொண்டான் என்றார். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் அல்லாஹ் வசனித்துள்ளான் என்று மற்றுமொருவர் கூறினர். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் கலிமாவாகவும், அவனது றூஹாகவும் உள்ளார்கள் என்றார் மூன்றாம் நபர், நான்காம் நபர் கூறினார். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுள்ளான் என்றார். இவர்களின் இந்த உரையாடல் நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் செவியில்பட்டதும், அவர்களைப் பார்த்து நபியவர்கள் இவ்வாறு நவின்றார்கள்.
‘நீங்கள் நபிமார்களின் சிறப்புக்களை வியந்து பேசியவைகளை நான் செவியேற்றேன். (நீங்கள் கூறியது போன்று) நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) கலீலுள்ளாஹ் என்பது உண்மைதான்! நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வுடன் வசனித்தார் என்பதும் உண்மைதான்! நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வின் றூஹும், அவனது கலிமா என்றும் நீங்கள் கூறியதும் உண்மைதான்! இப்போது (நான் கூறுவதை நன்றாக) அறிந்து கொள்ளுங்கள்! ‘நான் அல்லாஹ்வின் ஹபீப் (நேசர்) ஆவேன்! இதைப் பெருமைக்காகக் கூறவில்லை. மறுமையில் ‘லிவாஉல் ஹம்து என்ற கொ’டி எனது கரத்தில்தான் இருக்கும். இதனை பெருமைக்காக கூறவில்லை. சொர்க்கத்தின் தலைவாசலின் கதவுப் பிடியை முதலில் அசைப்பவரும் நானே! சொர்க்கத்தின் கதவை அல்லாஹ் எனக்காகத் திறந்து அதில் என்னை அவனே (முதலில்) நுழைவிப்பான். ஏழை முஃமின்கள் என்னுடன் இருப்பார்கள். இதனால் (மட்டும்) எனக்குப் பெருமை கிடையாது. முன்னோர், பின்னோர் யாவரிலும் நானே மிகச் சிறப்பானவன், இதுவும் பெருமைக்காகக் கூறப்பட்டதன்று
நூல்: திர்மிதி, தாரமி, மிஷ;காத் பாகம் 2, பக்.
இமாம் காழி இயாழ் றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
‘ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள், தனக்கு உதவி, உபகாரம் செய்வோர், சிறப்புக்குரியோர் உள்ளிட்ட அனைவரையும்விட, றஸூலுள்ளாஹி ஸல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் தகுதியையும், அன்னாரின் புகழையும், கௌரவத்தையும் மேலானதாக உறுதிகொள்ளும் வரை எவருடைய ஈமானும் சரியாகாது! இதனை ஏற்காதவனும், இதற்கு மாற்றமான எண்ணத்தைக் கொண்டவனும் ஒருபோதும் முஃமின் அல்ல!
ஆகாரம்: ஷறஹு முஸ்லிம், பாகம் 1, பக். 16
றபிஆ பின்து முஅவ்வித் கூறுகின்றார்.
எனது திருமண நாளன்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் எனது வீட்டுக்கு வந்து எனது விரிப்பில் எனக்கருகில் அமர்ந்திருக்கும்போது சிறுமி (ஜாரியாத்)கள் சிலர் ‘பத்று யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களின் வீரதீரங்களையும், அவர்களின் புகழ்களையும் கொட்டடித்துப் பாடிக்கொண்டிருந்தனர். நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் என்னருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்த அச்சிறுமிகள், தாங்கள் பாடி வந்ததை நிறுத்தி விட்டு நபியவர்களைப் புகழ்ந்து பாடத்துவங்கினர். அப்போது அவர்களுள் ஒருவர் ‘நாளை நடப்பதை இன்று அறியும் நன்நபி நம்மத்தியில் வந்துள்ளார்கள்’  என்று பாடியபோது நிறுத்துங்கள்! இதற்குமுன் பாடியதையே பாடுங்கள்! என்று நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பகர்ந்தார்கள்.
ஆதாரம்: புகாரி ஷரீப்
மேற்கண்ட நிகழ்வின் மூலம், பத்று மௌலிது ஓதுவதற்கு தக்க ஆதாரம் கிடைத்துள்ளது. திருமண நாள் உள்ளிட்ட மங்களகரமான தினங்களிலும் மௌலிதுகள் ஓதுவதற்கு ஆதாரம் இருக்கின்றது. நல்லவர்கள், பெரியவர்களின் புகழ்பாக்களை கொட்டடித்து சிறுவர், சிறுமியர் உட்பட ஏனையவர்கள் பாட்டிசைப்பதற்கும் இதில் அங்கீகாரம் உண்டு. மரணித்தவர்களை விழித்து, வியந்து பாடுவதும் நல்ல காரியம்தான் என்பதற்கு, தாஹா நபியின் அங்கீகாரம் தக்க சான்றாக உள்ளது. முக்கிய நிகழ்வுகளிலும் வேறு சந்தர்ப்பங்களிலும் மரணித்த சஹாபாக்கள், ஷூஹதாக்கள் உள்ளிட்டோரின் புகழ்களை கவியாக கொட்டடித்துப் பாடும் வழக்கம் சஹாபாக்கள் காலத்தில் இருந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? சிந்திக்கவும்!  
2. விசுவாசிகளுக்கு நினைவூட்டல்
அல்லாஹுத் தஆலா கூறுகின்றான்.
‘உமது இருதயத்தை திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து, இவையாவையும் உமக்கு கூறினோம். இவற்றில் உமக்கு உண்மையும் நல்லுபதேசமும், விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன.
(11-120)
இமாம் புறூஸவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
‘ஸகீனா’ என்ற அமைதியைக் கொண்டு ஈமான் அதிகரிப்பது போன்றே முந்திய உம்மத்துக்கள், நபிமார்கள் உள்ளிட்டோரின் சரித்திரங்களைச் செவியேற்பதன் மூலமாக (ஈமானின்) உறுதி மேலும், மேலும் அதிகரிக்கும்’.
ஆதாரம்: தப்ஸீர், றூஹுல் பயான்,பாகம் - 04, பக்கம் - 02
3. நபிமார்கள் நல்லோரைப் பின்பற்றல்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.    
‘இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக!
(சூறா அன்ஆம் - 90)
ஹளரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
‘யாராவது ஒருவரின் நடைமுறையை (சுன்னத்தை) நீங்கள் பின்பற்ற விரும்பினால், மரணித்தவர்களின் நடைமுறையை (சுன்னத்தை)ப் பின்பற்ற வேண்டும். உயிருள்ளவர் குழுப்பம் ஏற்படுவதிலிருந்து அச்சம் தீராதவராக உள்ளார். ஒருவரின் தற்போதைய நிலை அப்படியே இறுதிவரை நீடிக்கும் என்று எவரும் கட்டியம் கூற முடியாது. ஒருகால் பிற்காலத்தில் அவர் குழம்பி வழி தவறிச் செல்லவும் கூடும். இப்னு தைமிய்யா அஷ;ரப் அலிதானவி, றஷீத் அஹ்மது கங்கோஹி, உள்ளிட்டோரைப் போல (மரணித்த) நபியவர்களின் தோழர்கள் (குழப்பத்திலிருந்து அச்சந் தீர்ந்தவர்கள்) இந்த சமுதாயத்தில் இவர்கள்தான் மிகச் சிறந்தவர்கள். தூய்மை உள்ளம் உடையவர்கள். ஆழமான அறிவுமிக்கவர்கள். மார்க்கத்தின் குறைவான சட்டத்திற்குபட்டவர்கள் (இவர்கள் காலத்தில் மார்க்கப் பிரச்சினைகள் குறைவு. ஆதலால், மார்க்கச் சட்டங்களை குறைந்தளவையே இவர்கள் எதிர்கொண்டனர்).  
அல்லாஹுத்தஆலா இவர்களை (தனது) நபியின் தோழமைக்கும், மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கும் தேர்ந்தெடுத்தான். ஆதலால், இவர்களின் சிறப்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். (இவர்கள் சிறப்புக்குரியவர்களாக இருப்பதால்) இவர்களின் அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றுங்கள். அவர்களின் நற்பண்புகளையும், நடைமுறைகளையும் உங்களால் முடிந்தளவு பின்பற்றுங்கள்! அவர்கள் நேரான வழியில் இருந்தவர்கள் என்பது சர்வ நிச்சயம்!.
ஆதாரம்: றஸீன், மிஷ;காத், பாகம் 1, பக்கம் 32
4. சந்தோசத்தை வெளிக்காட்டல்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
(நபியே! நீர் கூறுவீராக!) அல்லாஹ்வின் அருளைக் கொண்டும், அவனுடைய கிருபையைக் கொண்டும் அவர்கள் சந்தோசப்படட்டும்.
(சூறா யூனூஸ் 18)
மீண்டும் கூறுகின்றான்.
(நபி ஈஸாவாகிய) அவர் பிறந்த நாளிலும், அவர் மரணிக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும்பும் நாளிலும், அவர் மீது சாந்தியும், சமாதானமும் நிலைத்திருக்கும்.
 (மர்யம் - 15)
சந்தோஷமான வேளைகளில் றபான் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த நேர்ச்சை செய்ய
முடியும் என்பதற்கான ஆதாரம் (‘நேர்ச்சை’ பற்றிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது ‘).  
ஹளரத் உர்வா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.
‘துவைபா’ என்பவர்; அபூலஹபின் அடிமைகளில் ஒருவர். (நபியவர்கள் பிறந்த செய்தியை அபூலஹபுக்கு துவைபாவே முதன் முதலில் தெரிவித்தார். இந்த நல்ல செய்தியைக் கேட்ட அபூலஹபு மகிழ்ச்சி மீக்குற்று) துவைபாவை அடிமையிலிருந்து உரிமையிட்டான். பின்னர் நபியவர்களுக்கு அமுதூட்டவும் பணித்தான். (பின்னர், அபூலஹபு நபியவர்களை ஏற்காத காரணத்தால் காபிராகவே மரணித்தான்).
ஹளரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு (அபூலஹபின் சகோதரர்) அபூலஹபைக் கணவில் கண்டார். அவன் மிக மோசமாக நரகில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். உன் நிலை என்ன? என்று ஹளரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, அபூலஹபிடம் கேட்டதற்கு, நான் மரணமடைந்ததிலிருந்து இதுவரை எந்த ஒரு நலவையும் காணவில்லை. ஆயினும், நபியவர்கள் பிறந்த செய்தியை துவைபா முதன்முதலில் எனக்குக் கூறிய போது ‘மகிழ்ச்சியில் சுட்டு விரலை நீட்டி, ‘துவைபா! உம்மை விடுதலை செய்து விட்டேன்!’ என்றேன். அது நடந்தது திங்களிலாகும். அதனால், திங்கள் தோறும் அந்த சுட்டு விரலிலிருந்து ஒரு பானம் சுரக்கின்றது. (அதனைச் சுவைப்பதால் சற்று சுகம் கிடைக்கின்றது) என்றான்.
ஆதாரம்: புகாரி ஷரீப், பாகம் - 2, பக். 754
இமாம் நாஸிறுத்தீன் றஹ்மத்துல்லாஹி அலைஹி தனது ‘வுறூதுஸ் ஸாதி பீ மௌலிதில் ஹாதி’. என்ற நூலில் இப்படி எழுதுகின்றார்.
அபூலஹபின் இரு கரங்களும் நாசமாகட்டும்! என்று இழிவாகக் கூறப்பட்டவன்! நிரந்தர நரகில் கிடப்பவன்! நரகின் நடுவிலிருக்கும் இவனுக்கு திங்கள் தோறும் விரலில் பானம் சுரக்கின்றது! அதனால், அவனது வேதனை குறைகின்றது! நபியவர்கள் பிறந்துள்ளார்கள் என்ற மகிழ்ச்சியில் விளைவு இதுவானால்,
நபியவர்களை விசுவாசித்து வாழ்நாள் முழுவதும் அன்னார் புகழ் கூறி ஆனந்தமடையும் ஒரு ஏகத்துவ வாதியான முஃமினின் நிலை எவ்வாறு இருக்கும்? என்று கற்பனை செய்துபார்! என்று ஒருவர் கவிபாடியுள்ளார்.
5. நேசமும், பின்பற்றலும்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
‘ஆகவே, எவர்கள் அவரை (மெய்யாகவே, விசுவாசித்து, அவரைப் பலப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவர்மீது அருளப்பட்ட ஒளிமிக்க (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தாம் சித்தி பெற்றவர்கள்.
(அல் அஃறாப் - 157)

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
‘(நபியே!) நீர் கூறும், உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய மக்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய துணைவர்களும், உங்களுடைய குடும்பமும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருட்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன் செய்துவரும் வர்த்தகமும், உங்களுக்கு (மிக்க) விருப்பமுள்ள (உங்கள் வீடுகளும்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அவனுடைய பாதையில் யுத்தம் புரிவதை விடவும் உங்களுக்கு மிக்க விருப்பமான வைகளாகயிருந்தால், (நீங்கள் உண்மை விசுவாசிகளல்ல! நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.
(சூறத்துத் தௌபா - 24)
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்.
தனது பெற்றோர், பிள்ளைகள் ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அவர்களுக்கு பிரியமுள்ளவனாக ஆகும் வரை உங்களில் எவரும் முஃமினாக முடியாது.
ஆதாரம்: புகாரி, பாகம் 1, பக். 7
றஸூல்மார்கள் அனைவரையும் நேசிப்பது ஈமானைச் சேர்ந்ததுதான். ஆயினும், எமது தலைவர் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை (இவர்கள் யாவரையும் விட) அதிகமாக நேசிக்க வேண்டும் என்பது அவர்களின் வி ஷேஷமான தனித்துவமாகும்.
ஆதாரம்: பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 85
ஹளரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
ஹளரத் ஸஃதுப்னு உபைதா ரழியல்லாஹு அன்ஹுவின் அவையில் நாங்கள் இருக்கையில், அங்கே றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு  அலைஹிவசல்லமவர்கள் வருகை தந்தார்கள். அங்கிருந்த ஹளரத் பி ஷ்றுப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாரை ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் விளித்து, அல்லாஹ்வின் திருத்தூதரே! உங்கள் மீது ஸலவாத் கூறுமாறு அல்லாஹ் எமக்குக் கட்டளையிட்டுள்ளான். ஆதலால், உங்கள் மீது நாம் எவ்வாறு ஸலவாத் கூறுவது? என்று கேட்டார். நபியவர்கள் விடை பகராமல் மௌனமாக இருந்தார்கள். (நபியவர்கள் பதில் கூறாததைக் கவனித்த நாங்கள்) இந்தக் கேள்வியை இவர் கேட்காமலிருந்திருக்கலாம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும்போது நபியவர் நவின்றார்கள்.
‘அல்லாஹும்மஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வபாரிக் அலா முஹம்மதின் கமா பாறக்த அலா இப்றாஹீம பில் ஆலமீன இன்னக ஹமீதுன் மஜீத்|| என்று கூறுங்கள் என்றார்கள்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம், பாகம் - 4, பக்கம் - 174
6. அல்லாஹ்வின் அருளை எடுத்துக்கூறல்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
‘அல்லாஹ் விசுவாசிகளின் மீது மெய்யாகவே அருள் புரிந்துள்ளான். அவர்களுக்கு ஒரு தூதரை (அதுவும்) அவர்களிலிருந்தே எழுந்தருளச் செய்தான். அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களைப் (பாவத்திலிருந்து) பரிசுத்தமாக்கியும் வைக்கின்றான். அன்றி அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றான். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.
(சூறா ஆல இம்றான் - 164)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்.
‘உமதிறைவனின் அருளை(ப் பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
(சூறத்துள்ளுஹா)
7. நன்றியை வெளிப்படுத்தல்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
‘உங்கள் இறைவன் (அவர்களை நோக்கி இதற்காக) நீங்கள் (எனக்கு நன்றி செலுத்தினால், நான் என்னுடைய அருளைப் பின்னும் உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறு செய்தால், நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் ஞாபகமூட்டுவீராக!
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் மதினாவிலிருக்கும் போது யஹூதிகள் ஆஸுறா நோன்பை (முக்கியத்துவம் கொடுத்து) நோற்பதைக் கண்டதும் இந்த நாளில் எதற்காக நீங்கள் நோன்பு நோற்கிறீர்கள்? என்று நபியவர்கள் கேட்டதற்கு, யஹூதிகள் இவ்வாறு பதில் கூறினார்கள்.
இது கண்ணியமான ஒரு தினமாகும். இந்த நாளில்தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் சமூகத்தையும் காப்பாற்றி, பிர்அவ்னையும், அவன் படைகளையும் அல்லாஹ் நதியில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துவதற்காகத்தான் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அத்தினத்தில் நோன்பு நோற்றார்கள்.
அதனால், நாங்களும் நோன்பு நோற்கின்றோம் என்றார்கள். அப்படியாயின், உங்களை விட மூஸா (அலைஹிஸ்ஸலாம் அவர்களு)க்கு நாங்கள்தான் ஏற்றமானவர்கள் என்று கூறிய நபியவர்கள் தாங்களும் அத்தினத்தில் நோன்பு நோற்று எங்களையும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா
ஆதாரம்: புகாரி ஷரீப், பாகம் 1, பக்கம் 341
ஹாபிழ் இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் பிறந்தது அல்லாஹ் நமக்குச் செய்த பெரியதோர் நிஃமத்தாகும். இந்த நிஃமத்திற்காக நன்றி செலுத்த வேண்டியது எமக்கு சுன்னத்தாகும்.
ஆதாரம்: தப்ஸீர் றூஹுல் பயான், பாகம் 9, பக்கம் 56
வளரும்-

புஷ்றா இதழ் – 37 பெப்ரவரிஃமார்ச்  2010

No comments:

Post a Comment