அடக்கஸ்தலம் உள்ள பள்ளியில் தொழலாமா?
கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி)அவர்கள்
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,
“மிஃறாஜ் இரவில் என்னை அழைத்துச் சென்ற ஜிப்ரயீல் பைத்துல் முகத்தஸில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் (புனித) கப்றை நெருங்கியதும், அங்கு இறங்கி இரு றக்அத்துக்கள் தொழுமாறு வேண்டினார்கள். இங்குதான் உங்கள் தந்தை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்று உள்ளது என்றார். பின் பைத்துல் லஹ்ம் பக்கமாகச் சென்றார்கள். அங்கும் இறங்கி இரு றக்அத்துக்கள் தொழுமாறு வேண்டினார்கள். இங்குதான் உங்கள் சகோதரர் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்த இடம் உள்ளது என்று விளக்கினார்கள்“.
அறிவிப்பாளர் : முஹம்மத் இப்னு ஜஹ்மத் இப்னு இப்றாஹீம்
நூல் : இப்னு ஹிப்பான்
மேற்கண்ட ஹதீதின் அறிவிப்பாளர் தொடர் சஹீஹானது என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள். நபியவர்களின் மேற்கண்ட கூற்று, நபிமார்கள், ஹாலிஹீன்கள் அடங்கப்பட்டிருக்கும் இடங்களில் தொழ முடியும் என்பதை தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
இதனை சிலர் ஆட்சேபிக்கின்றனர். அடக்கஸ்தலம் உள்ள பள்ளிவாசலில் தொழுவது தௌஹீதுக்கு எதிரான ஷிர்க்கான செயல் என்று குற்றம் சுமத்துகி்ன்றனர். இது கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கிக்கொண்ட யஹூதி, நஸாறாக்களுக்கு ஒப்பான செயல் என்று ஒப்பாரி வைக்கின்றனர்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,
யஹுதிகளையும், நஸாறாக்களையும் அல்லாஹுத்தஆலா சபிப்பானாக! அவர்கள், அவர்களின் நபிமார்கள் கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கிக் கொண்டனர்.
அன்னை உம்மு சல்மா, அன்னை உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் ஹபஷா நாட்டுக் கோயிலில் உருவப்படங்கள் இருப்பதைக் கண்டு வந்து றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள்,
அந்த மக்கள் அவர்களில் ஒரு நல்லடியார் மரணித்தால், அவர்களின் கப்றின் மீது பள்ளிவாசல் (மஸ்ஜித்)எழுப்புவர். பின் அவர் படத்தை அதில் தீட்டுவார்கள். கியாமத் நாளில் இவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களில் மிகக் கெட்டவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
நூல் : புகாரி, முஸ்லிம், நஸஈ, அஹ்மது
கப்றுகள் மீது கட்டிடங்கள் எழுப்புவதையும், அவைகள் மீது தொழுவதையும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரிய்யி ரழியல்லாஹு அன்ஹு
நூல் : அபூயஃயா
மேற்கண்ட ஆதாரங்களையே கப்றுள்ள பள்ளிவாசலில் தொழுவதை எதிர்ப்போர் முன்வைக்கின்றனர்.மேற்கண்ட நபி மொழிக்கு மிகப் பிரபலமான முபஸ்ஸிர் இமாம் நாஸூறுத்தீ்ன் பைழவி றஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு வரைகி்ன்றார்கள்.
யஹுதிகளும், நஸாறாக்களும் நபிமார்களைக் கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் கப்றுகளில் சுஜூது செய்வார்கள். தொழுகையில் அவர்களின் கப்றுகளை கிப்லாவாக ஆக்கிக் கொள்வதோடு அவர்களை(நபிமார்களை) விக்ரகங்கள்போல் கருதினர், அதனால்தான் அவர்கள் அல்லாஹ்வினதும் சகல மனிதர்களினதும் சாபத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். யாராவது ஒருவர் ஒரு நல்லடியாரின் கப்றுக்குப் பக்கத்தில் பள்ளிவாசலை நிர்மாணித்து அதிலிருந்து பறக்கத்தையும் எதிர்பார்த்து, கப்றை கண்ணியப்படுத்தாமலும் (கிப்லா) போன்று கிப்லாவாக்காமலும் இருந்தால் போதும், அது இந்த எச்சரிக்கைக்குள் வராது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : பத்ஹுல் பாரி, பாகம் - 1, பக்கம் - 754
ஹதீஸ், பிக்ஹ்துறை பேரறிஞர் அல்லாமா முல்லா அலிகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹி மேற்கண்ட ஹதீதுக்கு பின்வருமாறு விளக்கம் எழுதுகின்றார்கள்.
யஹுதிகளும், நஸறானிகளும் சபிக்கப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் பிரதானமானவையாகும்.
1. நபிமார்களின் கப்றுகளைக் கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் கப்றுகளுக்கு ஸுஜூது செய்தனர்.இது மறைமுகமான ஷிர்க் ஆகும்.
2. அல்லாஹ்வைத் தொழுவதற்கு நபிமார்களின் அடக்கஸ்தலங்களின் கப்றுகளை தேர்வு செய்து கொண்டனர். அவர்களின் கப்றுகளை முன்நோக்கியே தொழுதனர்.
3. அல்லாஹ்வி்ன் அனுமதியின்றி நபிமார்களின் கப்றுகளை எல்லைமீறி கண்ணியப்படுத்தினார்கள்.
இமாம் காழி இயால் றஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஒரு அறிவிப்பும் இதனை உறுதி செய்கின்றது.
யஹுதிகளும், நஸாறாக்களும் அவர்களின் நபிமார்களுடைய கப்றுகளுக்குச் ஸுஜூது செய்தனர்.அக்கப்றுகளையே தொழுகையின் கிப்லாவாக ஆக்கிக் கொண்டனர். அதனை விக்கிரகங்களாகவும் எடுத்துக் கொண்டனர். இதுதான் இவர்களை அல்லாஹுத்தஆலா சபிப்பதற்குக் காரணமாகியது. அதனால், இது போன்றவைகளில் ஈடுபடக் கூடாது என்று முஸ்லிம்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ஒருவர் ஒரு சாலிஹான ஒருவரின் கப்றுக்குப் பக்கத்தி்ல் ஒரு பள்ளிவாசலை அமைத்தால் அல்லது ஒரு மையவாடியில் தொழுதால், அதன் மூலம் அவர் பறக்கத்தைப் பெறுதல் அல்லது அவர் இபாதத்தின் ஒரு இபாதத்தை அடைதல் நோக்கமாயின், அவர் கப்றை கண்ணியப்படுத்துவதோ அல்லது அதை முன்னோக்கித் தொழுவதோ இல்லையாயின் எக்குற்றமும் கிடையாது.
பாருங்கள்! இஸ்மாயீல் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புனித கப்று மஸ்ஜிதுல் ஹறாமில் “ஹதீம்“என்ற பகுதியில்தான் இருக்கின்றது. அந்த இடம் தொழும் பள்ளிவாசல்களில் மிகச் சிறந்த இடமாகும்.மையவாடியில் தொழுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கான பிரதான காரணம் அங்கு காணப்படும் (நஜீஸ்)அசுத்தமேயாகும். இவ்வாறு இமாம் தீபி றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆதாரம் : மிர்காத் ஷரஹு மிஷ்காத், பாகம் - 1, பக்கம் - 456
ஹளரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கின்றார்கள்,
ஸியாரத் செய்யும் பெண்களையும், அங்கு பள்ளிவாசல் கட்டி விளக்கேற்றுவோரையும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் சபித்துள்ளார்கள்.
ஆதாரம் : திர்மிதி, அபூதாவத், நஸஈ
இதில் “அதில் பள்ளிவாசலை எழுப்புவோர்“ என்ற பகுதிக்கு விளக்கம் எழுதும்போது அல்லாமா முல்லா அலிகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,
இப்னு மலிக் என்பவர் கூறுகின்றார். கப்றில் பள்ளிவாசல்களை எழுப்புவதை ஹறாமாக்கியதற்கு காரணம் யஹுதிகள் அவ்வாறு கட்டி அங்கே தொழுதனர். இந்த யஹுதிகளின் நடைமுறையைப் பின்பற்றுவதைத் தடுப்பதே நோக்கமாகும். கப்றுக்கருகில் பள்ளிவாசல்களை நிர்மாணி்ப்பதில் எக்குறையும் கிடையாது.இதனையே “யஹுதிகளையும், நஸாறாக்களையும் அல்லாஹுத்தஆலா சபிப்பானாக! அவர்கள் நபிமார்களின் கப்றுகளிலும் ஸாலிஹீன்களின் கப்றுகளிலும் பள்ளிவாசல்களை எழுப்பினர்“ என்று ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றது.
ஆதாரம் : மிர்காத் பாகம் - 1, பக்கம் - 470
ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், அறிவாற்றலும்,நிபுணத்துவமுமிக்கவர்களும் இவ்வாறு மேற்கண்டவாறே விளக்கியுள்ளனர். கப்றைக் காட்டி ஒரு பள்ளிவாசலை வெறுப்பதும் இவ்வாறு செய்வது ஒரு வழிபாடு என்று கூறுவது சரியாயின்,றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் பள்ளிவாசலை வெறுக்க வேண்டும்.அவர்களின் ரௌலாவை தரிசிக்கச் செல்லக் கூடாது. இது எப்படிச் சாத்தியமாகும்? என் வீட்டிற்கும், எனது மிம்பருக்குமிடைப்பட்ட இடம் சொர்க்கத்தின் பூங்கா என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களே கூறியுள்ளார்கள்.
மற்றொரு அறிவிப்பில் வீட்டிற்குப் பதில் கப்று என்று வந்துள்ளது. அதாவது எனது கப்றுக்கும், எனது மிம்பருக்குமிடைப்பட்ட இடம் சொர்க்கத்தி்ன் பூங்காவில் ஒன்றாகும். இந்த ஹதீதை இமாம் பஸ்ஸார் அவர்கள் சஹீஹான ஸனதுடன் அறிவித்துள்ளார்கள்.
இதன்படிதான் தன் வீட்டில் தான் அடங்கப் பெறுவேன் என்பதையும், நன்கு அறிந்து கொண்டுதான் இவ்விடத்திற்கு இச்சிறப்பினைக் கூறியுள்ளார்கள். அங்கு செல்வதை ஊக்குவித்த றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் மஸ்ஜிதுல் ஹறாம் பள்ளிவாசலைத் தவிரவுள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு நன்மை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.குறிப்பாக கப்றுக்குப் பக்கத்தில் உள்ள இடம் சொக்கத்தின் பூங்கா என்றும் அங்கு தொழுவது மஸ்ஜிதின் ஏனைய இடங்களை விட மிகச் சிறப்பானது என்றும் அடையாளப்படுத்தியுள்ளார்ள்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்ட பின்பும் அன்னையவர்கள் அங்குதான் தங்கியிருந்தார்கள். அங்குதான் தொழுதார்கள். பின் கலீபாக்களான ஹளரத் அபூபக்கர், ஹளரத் உமர் பாறுக் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் அடக்கம் செய்யப்பட்ட பின்பும்,அன்னையவர்கள் அங்குதான் தொழுதார்கள். அன்னையவர்களின் வீட்டிற்கும் புனித கப்றுக்குமிடையில் தடு்ப்புச் சுவர் எதுவுமில்லை என்பது கவனிக்கத்தக்கது.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் வபாத்தின் பின் பள்ளிவாசலில் இட நெருக்கடி காணப்பட்டது. அப்போது ஜும்ஆ தினத்தில் இடநெருக்கடி காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ள உம்மு ஹாத்துல் முஃமினீன்களின் இல்லத்திலும் தொழுவார்கள். அப்போது அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹாவின் இல்லத்தில் புனித கப்றுகளுக்குப் பக்கத்திலும் ஸஹாபாக்கள் தொழுவார்கள். (எவரும் இது பிழை என்று குறை காணவில்லை) இவ்வாறு மாலிக் றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகி்ன்றார்கள்.
ஆதாரம் : வபாஉல்வபா பாகம் - 2, பக்கம் - 517
அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்,
ஸஹாபாக்கள் நபியவர்களின் கப்று மண்ணை எடுத்துச் செல்லத் தொடங்கினர். அதனால் கப்றுகளைச் சுற்றி சுவர் எழுப்புமாறு அன்னையவர்கள் கட்டளையிட்டார்கள். பின் அச்சுவரில் ஒரு துவாரம் இருந்தது.அதனூடாக மண் அள்ளத் தொடங்கினர். அத்துவாரத்தை அடைக்குமாறு அன்னையவர்கள் ஆனணயிட்டார்கள்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் காலத்தில் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டைச் சுற்றி சுவர் இருக்கவில்லை. வீட்டைச் சுற்றி முதன் முதலில் சுவர் எழுப்பியவர் அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆகும்.
ஆதாரம் : ஷறஹுல் ஈழாஹ் இமாம் ஹஜர் மக்கி பக்கம் - 9
நபியவர்களான நூஹ், ஹூத், ஸாலிஹ், ஷுஐப் அலைஹிமுஸ்ஸலாம் ஆகியோரின் அடக்கஸ்தலங்கள் றுகுனுல் யாமானிக்கும், மகாமே இப்றாஹீம், ஸம்ஸம் ஆகிய இடங்களுக்கு மத்தியில் இருக்கின்றன என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளதாக ஹஸன் என்பவர் தனது றிஸாலா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆதாரம் : ஷறஹுல் ஈழாஹ் இமாம் இப்னு ஹஜர் மக்கி, பக்கம் - 09
மினாவில் உள்ள மஸ்ஜிதுல் ஹைபில் பள்ளிவாசலின் நடுவில் ஹிஜ்ரி 874இல் கட்டப்பட்ட குப்பாவுக்குப் பக்கத்தில்தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அடங்கப்பட்டுள்ளார்கள். அதனால் அந்த இடங்களில் அதிகம் தொழுவது சுன்னத்தாகும்.
ஆதாரம் : வபாஉல் வபா பாகம் - 02, பக்கம் - 544
ஹளரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கப்றுக்குப் பக்கத்தில் தொழுதார்கள். இதனைக் கண்ட ஹளரத் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கப்று! கப்று! என்று சப்தமிட்டார்கள். கப்று என்று கூறியதை“கமர்“ என்று அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். பின் கப்றைக் கண்டதும் சற்று விலகிச் சென்று தொழுதார்கள்.
ஆதாரம் : பத்ஹுல் பாரி பாகம் - 1, பக்கம் - 653
ஹளரத் அனஸ் ரழியல்லாஹு கப்றில் தொழுததை மீட்டித் தொழவேண்டும் என்று ஹளரத் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு கட்டளையிடவில்லை.
ஆதாரம் - பத்ஹுல் பாரி பாகம் -1, பக்கம் - 653
ஹளரத் ஹஸன் (ஸைனுல் ஆபிதீன்) ரழியல்லாஹு அன்ஹு வபாத்தானபின் அவர்களின் கப்றின் மேல் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுவின் மகளான செய்யிதா பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா ஒரு குப்பாவை நிர்மாணித்து, அதில் ஒரு வருடம் தங்கியிருந்தார்கள். ஒரு வருடமாக அங்குதான் பர்ளு,சுன்னத் யாவும் தொழுதார்கள். அவர்களின் உறவினர் நேசர்கள் என்று அங்கு தங்கியிருந்து யாவரும் அங்குதான் தொழுதுள்ளனர்.
இவர்களின் காலம் சட்ட அறிஞர்கள் மிகைத்த காலமாகும். கப்றுள்ள இடத்தி்ல் தொழுவதோ, கப்றின் மேல் குப்பா அடிப்பதோ கூடாது என்று எவரும் தடுக்கவில்லை. இதனை இமாம் புகாரி அவர்கள் புகாரி ஷரீபில் பதிவாக்கியுள்ளார்கள்.
ஹளரத் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கின்றார்கள்.
ஏழு இடங்களில் தொழுவதை றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் தடுத்துள்ளார்கள்.
1. நஜீஸ் உள்ள இடங்கள், ஒட்டகம் மேயும் தரை
2. கால் நடைகள் அறுக்கப்படும் தொழுவங்கள்
3. மையவாடிகள்
4. குளியலறை
5. ஒட்டகம் போன்றவைகளை அடைக்க, கட்டப்படும் இடங்கள்
6. பாதை ஓரங்கள்
7. கஃபத்துல்லாஹ்வின் முகட்டிற்கு மேல்
ஆதாரம் : திர்மிதி
மேற்கண்ட இடங்களில் கஃபத்துல்லாஹ்வின் முகட்டிற்கு மேல் என்பதைத் தவிர, ஏனையவைகள் நஜீசும் ஷைத்தான்களும் நிறைந்து காணப்படும் இடங்களாகும், அதனால் எங்கு அசுத்தமும், ஷைத்தானின் நடமாட்டமும் அதிகமுள்ளதோ அங்கெல்லாம் தொழுவது மக்றூஹ் ஆகும். தவிர தொழுகை கூடாது என்பதல்ல. இப்படியான இடங்கள் சுத்தமாக இருப்பின் தொழுகை நிறைவேறும். கஃபதுல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதற்காகத்தான் கஃபதுல்லாஹ்வுக்கு மேலால் தொழுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில்,
1. நபிமார்கள், வலிமார்களின் கப்றுகளை கிப்லாவாக்கியோ அல்லது கண்ணியப்படுத்தும் நோக்கிலோ கப்றை நோக்கித் தொழக் கூடாது. இவ்வாறு தொழுவது யஹுதி, நஸாறாக்களின் நடை முறையாகும்.தவிர இவ்வாறு தொழுவோர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும்.
(முஸ்லிம்களில் எங்கும், எவரும் கப்றுகளை தொழுமிடமாக்கவோ அல்லது கப்றுகளை கிப்லாவாக்கி தொழவோ இல்லை)
2. கப்றுக்குப் பக்கத்தில் தொழுவதிலோ, பள்ளிவாசல் கட்டுவதிலோ எக்குறையும் கிடையாது.
3. நபிமார்கள், ஸாலிஹீன்களின் கப்றுக்குப் பக்கத்தில் அவர்களின் புனித றூஹின் பறக்கத் கிட்ட வேண்டும் என்ற நோக்கில் தொழுவதும், பள்ளி நிர்மாணிப்பதும் கூடும். வரவேற்கத்தக்கது.
4. கப்றுக்குப் பக்கத்தி்ல் ஸஹாபாக்கள் தொழுதுள்ளனர். எவரும் அத்தொழுகையை மீட்ட வேண்டுமென்றோ, அவ்வாறு தொழுவது கூடாது என்றோ கூறவில்லை.
5. அசுத்தமான இடங்களிலும், ஷைத்தானி்ன் நடமாட்டம் உள்ள இடங்களிலும் தொழுவது மக்றூஹ் வெறுக்கத்தக்கது.
6. கப்றுள்ள இடத்தில் தொழுவது கூடாது என்று கூறுவது ஷரீஅத்தை விளங்காதவர்களின் வாதமாகும்.எனவே,
மக்களைக் குழப்ப வேண்டும் என்ற தீய நோக்கை மட்டு்ம் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் வழிதவறிய வஹாபிகளின் தீய நச்சுப் பிரச்சாரத்திற்குப் பலியாகாமல் இஸ்லாத்தை சரியான வழியில் விளங்கி செயல்பட முயல வேண்டும். இறுதி காலத்தில் முஸ்லிம்களைக் குழப்பும் தீய சக்திகள் புற்றீசல் போன்று புறப்படுவர் என்று திருத்தூதர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் தீர்க்க தரிசனமாகக் கூறியது போன்ற கூட்டம் இன்று பரவலாக நடமாடுகின்றன. அதனால் ஈமானைப் பாதுகாத்து முஃமினாக வாழ்ந்து மரணிக்க கிருபையுள்ள றஹ்மான் எம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
நன்றி : புஷ்றா, இதழ் - 01 நவம்பர் 2008