இறை திருநாமமும் பண்பும் (அஸ்மாஉ , ஸிபாத்)
'அஸ்மாஉ' என்பது 'இஸ்ம்' எனும் அரபிப் பதத்தின் பன்மை. இஸ்ம் என்பது எதற்கு பெயர் வைக்கப்படுகின்றதோ அதைக் குறிக்கும் ஒன்றாகும். இந்த இஸ்ம் என்பது கற்பனையில் உருவகப்படுத்தவோ, ஆழ்ந்து ஆராயவோ, மனதில் பதியவைத்துக் கொள்ளவோ முடியுமானதாக இருகின்றது.
இனி ஸிபாத் என்பது 'சிபத்' எனும் அரபிப் பதத்தின் பன்மை ஆகும். ஸிபத் என்பது வர்ணனை, பண்பு, குணம் எனப் பொருள் படும். அதாவது எந்த பொருளை நாம் வர்ணிக்கின்றோமோ அந்தப் பொருளின் தன்மையை அல்லது குணத்தை உணர்த்துவதே ஸிபாத் ஆகும்.
பிரஞ்சம் வெளியாகக் காரணம் 'அஃயான் தாபிதா' வாய் இருக்கும். அஃயான் தாபிதா அஸ்மாவையும், சிபாதையும் அதற்கு காரணமாக கொண்டதாகும். அவையோ உள்ளமையை (தாத்தே) தமக்கு காரணம்(மூலம்) என்று காட்டும். அதாவது இப்பிரபஞ்சத்தின் தோற்றமானது தாத் முத்லக் ஆன அல்லாஹ்வின் அஸ்மா சிபாத்துகளை கொண்டே உருவாயிற்று அதனாலே தான் அல்லாஹ்வை அவனுடைய அஸ்மா ஸிபாத்தை கொண்டே ஓரளவு அறிய முடியும்.
ஸிபாத் ஆனது தாத்தை (உள்ளமையை - அல்லாஹ்வை) விட்டும் வேறானது அல்ல புதிதானதும் அல்ல அவை அல்லாஹ்வுடைய வுஜூதுடனேயே காணப்படும். பிரபஞ்சம் உண்டாவதற்கு முன் அவனுடைய ஸிபாத்தும், ஸிபாத்துடன் தொடர்புடைய அஸ்மாவும் வெளிப்படுத்தப்படாமல் இருந்தன. இதனாலையே அனைத்தையும் படைக்கும் முன் அல்லாஹ் மட்டுமே (அல்லாஹ் உடைய சிபாத், அஸ்மா வெலிப்படுத்தபடாமல் இருந்த நிலை)இருந்தான் என்று நபி பெருமானார் சல்லல்லஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.
இன்னும் அஸ்மா உல் ஹுஸ்னா தொடர்பாக அல்லாஹுத் தஆலா திருமறையில் குறிப்பிடும் போது
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ
"அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் "அல் குர்ஆன் (7:180)
என்று குறிப்பிடுகின்றான். இன்னும் அவைகள் அவனின் பண்புகளையும் (சிபாத்துகள்) எடுத்துக் காட்டுவனவாகும். தன் அடியார்களின் விதர்ப்பமான வெவ்வேறு சமயங்களில் திருநாமங்களின் ஒன்றில் அல்லது பலதின் குணப்பாட்டை சந்தர்பத்திற்கு ஏற்றவாறு அவர்களில் அல்லாஹுத் தஆலா தோற்றமளிக்க அல்லது வெளியாக்கச் செய்கின்றான். எனவே இத் திருநாமங்கள் அவனின் குத்ரத்தை (சக்த்தியை) குறிக்கின்றன. இத் திருநாமங்கள் தத்தமக்குரிய பண்புகளை (ஸிபாத்துகளை) வெளியாக்குகின்றதாலே இப்பிரபஞ்சம் இயங்குகின்றது. இது எவ்வாறென்றால் அல்லாஹுத் தஆலா ஆற்றலுடையவன் (காதிருன்) என்ற ஸிபத்தால் இப்பிரபஞ்சம் வெளியாக்கப்பட்டது. அவனுடைய சிருஷ்டிப்பவன் (ஹாலிக்) என்ற அஸ்மாவினால் சிருஷ்டிகள் வெளிப்பட்டன. உணவளிக்கப்பட வேண்டியவைக்கு உணவளிப்பவனாக இருப்பதால் அவனுடைய ''உணவளிப்பவன்" என்ற நாமம் வெளியாயிற்று.
உதாரணத்திற்கு, ஒருவருக்கு வீடு கட்டத் தெரிந்திருப்பது அவரின் ஸிபத் ஆகும், அத்தொழிற் பண்பு உடையவர் பெயர் 'கொத்தன்' என்று அழைக்கப்படும். இதுபோல ஆற்றல் மிக்கவனுக்கு 'காதிர்' (ஆற்றலுடையவன்) என்றும், அறிவெனும் பண்பு உள்ளவனுக்கு ஆலிம் (அறிந்தவன்) என்றும், பார்வை எனும் பண்புடையவன் 'பஸீர்' (பார்வையுடையவன்) என்றும், அடக்கியாளும் தன்மை உடையவனுக்கு 'கஹ்ரு' ( அடக்கியாள்பவன்) என்று கூறுவது போல அல்லாஹ்விற்கு அறியப்பட்ட திருநாமங்கள் 99 இருப்பதாக கூறப்படுகின்றது.
இத்திருனாமங்களின் குணப்பாட்டினாலேயே மனிதன் புதுப் புது விசயங்களை கண்டுபிடிக்கச் செய்கின்றான். இன்றைக்கும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் நூதனங்கள் எல்லாம் அல்லாஹுத் தஆலாவின் திருநாமங்களின் குணங்கள் அவனிலிருந்து மனிதனில் வெளியாக்கப்படுவதால் ஆகும். இத் திருநாமங்களில் 'இஸ்முல் அஃலம்' என்ற கனதி மிக்க அல்லது மிக சக்திவாய்ந்த திருநாமங்களும் அடங்கும். இதனைக் கொண்டே இறை நேசர்கள் பல புதுமைகளை நிகழ்த்துகின்றார்கள். இதனாலேயே அல்லாஹுத் தஆலா தனது திருநாமங்களின் மூலம் அழைத்து பிரார்த்திக்கும் படி கூறுகின்றான்.
இவ்வாறு இறைவனில் நின்றும் இப்பண்புகள் மனிதனுக்கு வருகின்றவையானாலும், அல்லாஹுத் தஆலா வின் பண்பிலிருந்து ஒரு பங்கு வந்து இறங்குவதாகும் என்று என்னிவிடக் கூடாது. ஆனால் யதார்த்தம் அதுவன்று. உதாரணமாக இறைவனுடைய 'ஹயாதுடையவன்' என்ற ஜோதியிலிருந்து (தன்மையிலிருந்து) ஒளி பெற்றே சிருஷ்டிகள் யாவும் உயிருடையவையாய் விளங்குகின்றன. அதனால் அவனுடைய உயிர் சிருஷ்டிகளில் வந்து இருப்பதாக சொல்ல முடியாது. இதுவானது இறைவனை சூரியனுக்கும் அவனுடைய கல்யாண குணங்களை அதன் பிரகாசத்திற்கும் உவமை கூறுவதை கொண்டு விளங்கலாம். சூரியனுடைய பிரகாசத்தால் அதை விட்டு எதுவும் குறையவும் இல்லை அகலவும் இல்லை என்பது போல அது தன் பிரகாசத்தை செலுத்தும் பொருள்களில் வந்து சேரவும் இல்லை. இதுபோல அல்லாஹுத் தஆலாவின் சிபாத்களும் அஸ்மாக்களும் படைபினங்கள் மீது செலுத்தப்படுகின்றதால் அவை அக்குணங்களை யதார்த்தில் தன்னில் கொண்டு இயங்குபவை அன்று மாறாக இயக்கப்படுபவை ஆகும்.
பிரபஞ்சம் முழுவதும் மிக விரிவான கண்ணாடி போன்றது, அல்லாஹுத் தஆலாவின் சிபாத்களும் அஸ்மாக்களும் அந்தக் கண்ணாடியில் பிரகாசிக்கின்றன. கண்ணாடியில் தோன்றும் பொருள்களுக்கு அந்தத் தோற்றம் நிழலாய் இருக்கும். இதனாலே பிரபஞ்சம் அஃயான் தாபிதா வின் நிழல் என்றும், அஃயான் தாபிதா அஸ்மா சிபாத்களின் நிழல் என்றும், அஸ்மாவும் சிபாதுன் ஸிபாத்தும் அல்லாஹுத் தஆலாவின் உஜூதின் நிழல் என்றும் கூறப்படுகின்றது. இவ்விதம் யதார்த்தத்தில் நமக்கு எதுவும் சொந்தமாக இல்லாமல் இருகின்றோம்.
சிந்தித்து அறிவீர்கள்
No comments:
Post a Comment