Sunday, April 27, 2014

ஸியாரத் பற்றி சிறு குறிப்பு



"எவர் என் கப்ரை தரிசிக்கிறாரோ அவருக்கு எனது ஷபாஅத் (பரிந்துரைப்பு) கடமையாகி விட்டது" (தாரகுத்னி பாகம் 2 பக்கம் 278 பைஹகீ 3/490) என்றும் "என்னை ஸியாரத் செய்வதற்கென்றே தயாராகி எவர் என்னை தரிசிக்கிறாரோ அவர் நாளை மறுமையில் என் அயலில் இருப்பார்" (மிஷ்காத் 240) என்றும் ஹதீஸ் வந்துள்ளது.

இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு சில பெரியார்கள் ஹஜ்ஜுக்கு என்று ஆயத்தமாகி மக்கமா நகரம் செல்வது போன்றே புனித ஸியாரத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு புனித மதீனாப் பயணம் மேற் கொண்டுள்ளார்கள் என்பதை வலிமார்களின் மற்றும் நல்லவர்களான ஸாலிஹீன்களின் வரலாறுகளில் காணமுடிகிறது.

"எவர் ஹஜ்ஜு செய்து விட்டு என் வபாத்திற்குப் பிறகு என் கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவர் என்னை என் ஹயாத்திலேயே சந்தித்தவரைப் போன்றவராகிவிடுகிறார்" (மிஷ்காத் 241) என்று ஹதீஸ் வந்துள்ளதால் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் பெருமானாரின் புனித ரவ்ழா ஷரீபை தரிசிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஸியாரத்தின் முறைகளும் பலன்களும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை ஸியாரத் செய்வதால் ஏற்படும் பலன்களை குறிப்பிட்டிருப்பது போன்றே பொது கப்ரிஸ்தானங்களுக்குச் சென்று தாங்கள் ஸியாரத் செய்து காட்டி அதன் முறைகளையும் விபரித்ததுடன் அதனால் ஏற்படும் பலாபலன்கள்களையும் நமக்கு எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.

"ஸியாரத்திற்குச் சென்றால், முஃமீன் முஸ்லிம்களில் நின்றும் வீட்டையுடையவர்களே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களாக இருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்வின் சுகத்தைக் கேட்கிறோம் என்று கூற வேண்டும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபா பெருமக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். (முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 154)

1. "எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்று எழுதப்படும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, மிஷ்காத் பக்கம் 154)

2. "கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (இப்னு மாஜா 1569, மிஷ்காத் பக்கம் 154)

أَلْهَاكُمُ التَّكَاثُرُ (1) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (2)
3. "இவ்வுலகில் அதிகமான செல்வங்களைத் திரட்டி சுக போகமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் உங்களை வீணான விஷயங்களில் ஆழ்த்திவிட்டது. (அது எதுவரை என்றால்) நீங்கள் கப்ருகளை [ஸியாரத் செய்கின்ற] சந்திக்கும் வரை" (அல்குர்ஆன் 102:1,2) என்று வான் மறை குர்ஆன் ஷரீப் கூறுகிறது.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறப்பட்ட குர்ஆன் ஆயத்தையும் ஹதீஸ்களையும் நன்றாக உற்று நோக்குங்கள். உலகப் பற்று நீங்கி இதயம் ஒளிமயமாவதற்கு சிறந்த சஞ்சீவிதான் ஸியாரத் என்பதை உணர்வீர்கள்.


எல்லாம் வல்ல ரஹ்மான் ஸியாரத்தின் மூலம் மனத் தெளிவையும் பற்றற்ற நிலையும் அடைந்த நல்லோர்களுடன் நாம் யாவரையும் சேர்த்தருள் புரிவானாக. ஆமீன்!

No comments:

Post a Comment