இறை உள்ளமை - உஜூத் (தாத்)
எழுதியவர் இறைஞானம்.காம்
இந்த உஜூதுக்கு உருவம் வரம்பு எதுவும் இல்லை, இதே போல இவ்வுள்ளமையின் கல்யாண குணங்களுக்கும் (சிபாத்) வரையரை (limits) எதுவும் இல்லை. இது தன்சீஹின் நிலைகுரியதாகும். இதிலிருந்து (உஜூதில்) வெளியாகக் கூடிய சுடர்களுக்கு (தஜல்லியாத்) உருவமும் எல்லையும் உண்டு. எவ்வாறாயினும் இது உஜூதில் எம்மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
அல்லாஹுத் தஆலாவின் இவ்வுள்ளமையை (உஜூத் - தாத்) அறிய முடியாது, அனைத்து அறிவிற்கும் அப்பாட்பட்டதே இவ்வுள்ளமையாகும் இதனாலேயே மெய் ஞானிகள், "மெய் ஞானத்தின் முடிவான அறிவே இறையுள்ளமையை (அல்லாஹ்வின் உள்ளமையை) அறிய முடியாது என்று அறிந்துணர்வதாகும் " என்று கூறுகின்றார்கள்.
இறையுள்ளமையை அறிய முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். வானத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியன இருப்பதை தினமும் காண்கின்றோம். நம் கண்களுக்கு மிகவும் சிறிய பொருள்களாகவும், அருகருகே இருப்பது போல தெரியும் ஆனால் இவை உள்ளமையில் எவ்வளவு பெரிதாக இருக்கின்றன, பூமியின் விட்டத்தை விட சூரியனின் விட்டம் 109 மடங்கு விட்டத்தை உடையதாகும், அருகருகே காணப்படும் நட்சத்திரங்கள் ஒன்றிலிருந்து மற்றதுக்கு பலகோடி மடங்கு துரத்தில் அமைந்துள்ளது. இத்தகைய ஆகாய வெளியில் நாம் வாழும் இப்பரந்த பூமி ஓர் அணுவுக்கே சமமாக உள்ளது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை எல்லாம் "குன்" என்ற சொல்லை கொண்டு ஆக்கியுள்ளவனின் உள்ளமையை எங்கனம் நமது அறிவால் இன்னது தான், இப்படிதான், இங்குதான் என்றெல்லாம் மட்டுப்படுத்த முடியும் ? இந்த வான்வெளியே நம் அறிவுக்கு எட்டாத நிலையில் நாம் அல்லாஹின் உள்ளமையை அறிவால் மட்டுப்படுத்தவோ, அவன் உள்ளமையை அறியவோ முடியுமா?
இறைவனை ஞானதிருஷ்டியால் (கஷ்பால்) காண்பது என்பது அவனுடைய உள்ளமையை (தாத்தை) காண்பதல்ல. அவனுடைய அருட் சுடர்களை (தஜல்லி) காண்பது ஆகும். ஆக அவன் உள்ளமையை அறிய முயல்வது வீண் வேலையும், குப்ரை உண்டாக்கக் கூடியதுமாகும். இதனாலே தான் இறைவனை அறிய அவன் படைப்புக்களை ஆராயும் படி கூறப்படுகின்றது.
வாஜிபுல் வுஜூத் , மும்கினுள் வுஜூத்
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் வஸ்துகளையும் கவனித்துப் பார்க்கும் போது, ஒன்றாவது தன்னை தானே உண்டாக்கி கொண்டது என்று நினைக்க முடியுமா? அல்லது உண்டாக்கித் இருக்குமா?. இல்லை, அவை உண்டாக முன்பு அவை இல்லாமையில் தான் இருந்தது. இல்லை என்ற நிலையில் இருந்த ஒன்று எவ்வாறு தன்னை உருவாக்கிக்கொள்ள முடியும்?. மேலும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே மாறுதலடைபவையாகவும், அழிபவையாகவும் தான் உள்ளன. எனவே, அவற்றில் எதுவும் பூர்விகமானதல்ல புதிதானது ஆகும் என்பது விளங்கும். புதிதானது உண்டாவதற்கு ஒரு மூலம் அல்லது பரம் பொருள் இருக்க வேண்டும். அந்த வேறொன்றுக்கு தொடக்கம் இருந்தால் அதை உண்டாக்க வேறொன்று இருக்க வேண்டும், இவ்விதம் ஒன்றன் பின் ஒன்றாக பார்த்து வந்தாலும் இறுதியில் பூர்விகமான ஓர் உள்ளமை இருக்கவே வேண்டும் என்றாகிறது, அந்த உள்ளமை இல்லாலது எதுவுமே இருக்க முடியாது. இதனாலேயே அவ்வுள்ளமைக்கு "வாஜிபுல் வுஜூத்" (அவசியமான உள்ளமை) என்று கூறப்படும். இன்னும் இதுவே "குன் ஹு ஸாத்" என்றும் கூறப்படுவதும் ஆகும்.
புதிதானவைகள் (படைப்புக்கள்) இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவற்றால் அந்த உள்ளமைக்கு எந்த தேவையும் இல்லையாதலால் அதற்கு "மும்கினுள் உஜூத்" (தனக்கு தானே ஆதாரமான அல்லது மூலமான உள்ளமை) என்ற பெயர் உண்டாயிற்று.
உஜூத் (உள்ளமை) எப்போதும் ஒன்று தான் அதை நாம் அறிய படைப்ப்பிணங்களை ஆராயும் போது அதன் தன்மையை "வாஜிபுல் வுஜூத்" (அவசியமான உள்ளமை) , "மும்கினுள் உஜூத்" (தனக்கு தானே ஆதாரமான அல்லது மூலமான உள்ளமை) என்று அறியப்படுவதால் அவ்வாறு பிரித்து கூறப்படும்.
அந்த உள்ளமை பூர்விகமானது என்றும், அண்டங்கள் யாவும் உண்டாக காரணமாக இருப்பதால் சர்வ வல்லமை உடையது என்றும், அனைத்து சிருஷ்டிகளையும் கூர்ந்து கவனிக்கும் போது அவ்வுள்ளமை சம்பூர்ண ஞானமுடையது என்றும், சிருஷ்டிகள் அனைத்திலும் உயிர் பரந்து செறிந்து காணப்படுவதால் அந்த உள்ளமை நித்தியா ஜீவன் உடையது என்றும் அறியலாம்.
இவ்வுள்ளமையை உடையவனே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆகும்.
தொகுப்பு: "அஸ்ராருள் ஆலம்" என்ற புத்தகத்தில் இருந்து...
No comments:
Post a Comment